அரியலூர்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி
|அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
அரசு அலுவலகங்களில் பணி...
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் சிறிது காலம் தற்காலிக பணியாளராக வேலை செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர், அவரது நண்பரான செந்துறை வட்டம், பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவனின் மகன் பிரகாசத்திடம் (43), அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக எழுத்தர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரத்தை முன் பணமாக பெற்றுள்ளார்.
பின்னர் நிரந்தர பணி வாங்கி தருவதாக கூறி பிரகாசத்திடம் பணம் பெற்று, அவருக்கு போலி அரசு பணி நியமன ஆணையை வழங்கியதாக தெரிகிறது. மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்கள் பலருக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார்.
கொலை மிரட்டல்
இதன்படி மொத்தம் ரூ.69 லட்சத்து 35 ஆயிரத்தை குணசேகரன் அவரது வங்கி கணக்கின் மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு, குணசேகரன் போலி அரசு பணி நியமன ஆணைகளையும் தயார் செய்து வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் வழங்கியது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்ததையடுத்து, அவரிடம் இதுபற்றி பிரகாசம் கேட்டுள்ளார். அப்போது அவர், பிரகாசத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பிரகாசம் புகார் அளித்தார். அதன்பேரில் குணசேகரன் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் நேற்று முன்தினம் அரியலூர் பஸ் நிலையம் அருகே குணசேகரன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி, சப்-இன்ஸ்பெக்டர் அமரஜோதி மற்றும் ேபாலீசார் ெசன்று, குணசேகரனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து குணசேகரனை செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.