எஸ்.சி. பிரிவினருக்கு சொந்தமான நத்தம் நிலத்தின் மீது அரசு உரிமை கொண்டாட முடியாது
|எஸ்.சி. பிரிவினருக்கு சொந்தமான நத்தம் நிலத்துக்கு தமிழ்நாடு அரசு சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக எஸ்.சி. பிரிவினருக்கான நத்தம் நிலத்தை காலி செய்து கொடுக்கும்படி அங்கு வசித்த சாக்ரடீஸ் உள்பட 5 பேருக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எஸ்.சி. பிரிவினருக்கான நத்தம் நிலம், அரசுக்கு சொந்தமானது அல்ல. அந்த நிலத்தில் வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யும்படி தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்பட்டால் உரிய இழப்பீடு தரும் பட்சத்தில் அந்த நிலத்தை வழங்க மனுதாரர்கள் தயாராக உள்ளனர்'' என்று வாதிடப்பட்டது.
வணிக நோக்கம்
தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில், "குறிப்பிட்ட அந்த நிலம் எஸ்.சி. பிரிவினர்களுக்கான நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்கு பட்டா எதுவும் வழங்கப்படவில்லை. நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும்.
ஆனால், மனுதாரர்கள் கடைகள் கட்டி மாதம் ரூ.70 ஆயிரம் வாடகை வசூலித்து அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியதால், அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படமாட்டாது'' என்று வாதிடப்பட்டது.
உரிமை இல்லை
இதையடுத்து நீதிபதிகள், "எஸ்.சி. பிரிவினருக்கான நத்தம் நிலத்துக்கு சொந்தம் கொண்டாட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அந்த நிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, அங்கு வசிப்பவர்களை காலி செய்து கொடுக்கும்படி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அதேநேரம், அந்த நிலத்தை மெட்ரோ ரெயிலுக்காக வழங்க மனுதாரர்கள் தயாராக இருப்பதால் உரிய இழப்பீட்டை வழங்கி, சட்ட விதிகளை கடைப்பிடித்து அந்த நிலத்தை தமிழ்நாடு அரசும், மெட்ரோ ரெயில் நிர்வாகமும் கையகப்படுத்தலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.