விழுப்புரம்
விழுப்புரத்தில் கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி.அலுவலர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|விழுப்புரத்தில் கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி.அலுவலர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவநாதன், பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் சிவச்சந்திரன், மண்டல செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கூட்டுறவுத்துறை எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்க நிர்வாகிகளை தரக்குறைவாக நடத்தியும், இழிவுப்படுத்தியும் இனப்பாகுபாடோடு நடந்துகொண்ட விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், அரசாணைக்கு முரணாக பட்டியலின அலுவலர்களை இனரீதியாக பழிவாங்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அரசுக்கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசை ஏமாற்றி அரசு நிதியை பெற்றுள்ளவர்களுக்கு உடந்தையாக செயல்படும் மண்டல இணைப்பதிவாளர் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.