< Back
மாநில செய்திகள்
எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும்...சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
மாநில செய்திகள்

எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும்...சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

தினத்தந்தி
|
8 April 2024 5:33 PM IST

தேர்தலுக்கு முன், யூடியூபில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் மதுரை கிளை, இனி யார் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என நிபந்தனை விதித்தது.

அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதால், தஞ்சை வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ஐகோட் மதுரை கிளை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரைமுருகன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது. மேலும் ஜாமீனில் இருக்கும்போது அவதூறான கருத்துக்களை வெளியிடாமல் இருக்க சட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

"ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன், யூடியூபில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேரை சிறையில் அடைப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்..?" என தமிழக தரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் கருத்து தெரிவிப்பதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர் தனது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் செய்திகள்