< Back
மாநில செய்திகள்
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
1 April 2024 1:33 PM IST

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பின்னர் செந்தில் பாலாஜி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ச்சியாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு நிராகரித்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் பெற எந்த ஒரு தகுதியும் இல்லை என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரிம் கோர்ட்டு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை பதில் தரும் வரை விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கு அமலாக்கத்துறை வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பது தேவையற்றது எனக்கூறி விசாரணையை நீதிபதி வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்