அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ்
|தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2,236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கனவே நலிவடைந்த நிலையிலுள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப்பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.
தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.
தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.
ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?
தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6,587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2,236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.
அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.