தேனி
கேரளா சென்று வருவதாக கூறிபெண்ணிடம் காரை வாங்கி மோசடி:தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
|கேரளா சென்று வருவதாக கூறி பெண்ணிடம் காரை வாங்கி மோசடி செய்த தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், கேரள மாநிலம் பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் அனில் மேத்யூ. இவருடைய மகன் அபிஷேக் மேத்யூ. இவர்கள் இவரும் தேனி நகர் மதுரை சாலையில், வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் தொழில்படிப்புகளுக்கான வழிகாட்டி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அனில்மேத்யூவும், தேனி பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெருவை சேர்ந்த மகேந்திரன் என்ற சூர்யாவும் நண்பர்கள்.
இந்த வழிகாட்டி நிறுவனத்தில் எனது மனைவி மகேஸ்வரி உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, அனில் மேத்யூ மற்றும் அவருடைய மகன் இருவரும் கேரளாவுக்கு சென்று வருவதற்காக, மகேஸ்வரிக்கு சொந்தமான காரை கேட்டனர். அவரும் தனது காரை கொடுத்தார். ஆனால், காரை வாங்கிச் சென்றவர்கள் அதை திருப்பிக் கொடுக்கவில்லை.
கடந்த மாதம் தேனி என்.ஆர்.டி. நகரில் நின்று கொண்டிருந்த சூர்யாவிடம், நான் காரை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு அவர், அந்த காரை அனில்மேத்யூ உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து விற்றுவிட்டதாகவும், இனிமேல் காரை கேட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில், அனில் மேத்யூ, அபிஷேக் மேத்யூ, மகேந்திரன் என்ற சூர்யா ஆகிய 3 பேர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.