திருப்பூர்
பழங்கால கிராம நிர்வாக முறையின் வரலாற்று நினைவுச் சின்னமாக கிராம சாவடி
|மடத்துக்குளம் பகுதியில் பழங்கால கிராம நிர்வாக முறையின் வரலாற்று நினைவுச் சின்னமாக கிராம சாவடிகள் உள்ளன.
மடத்துக்குளம் பகுதியில் பழங்கால கிராம நிர்வாக முறையின் வரலாற்று நினைவுச் சின்னமாக கிராம சாவடிகள் உள்ளன.
கிராமசபை முறை
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திற்கு முன்பு, கிராம நிர்வாகமுறை பின்பற்றப்பட்டது. கிராமங்களில் ஊர்கட்டுப்பாடு மற்றும் கிராமசபை முறை இருந்தது. பொதுப்பிரச்சினைகள், இரு தரப் பினருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம், பிணக்குகள், சண்டைகள் உள்ளிட்ட பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வாக கிராம சபையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கட்டுப்பட்டனர்.
இது தவிர கோவில் திருவிழா, நோன்பு சாட்டுதல், கிராமங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், கால்வாய்கள் பராமரிப்பு, பாசன நீர் பங்கீடு, விளைந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லுதல் போன்றவைகளும் இந்த கிராம சபைகளில் தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரிவசூல்
மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்த கிராம சபை மிகவும் அதிகாரமிக்கதாக இருந்தது. இதன் மூலம் கிராமங்களில் வரி வசூல் செய்யப்பட்டு மன்னருக்கு கொடுக்கப்பட்டது. இந்த கிராம சபையின் அலுவலக கட்டிடத்தை சாவடிகள் என அழைத்தனர். இந்த சாவடிகள் கட்டப்பட்டுள்ள இடம் தலைவாசல் என பல கிராமங்களில் குறிப்பிடப்படுகிறது.
தலைவாசல் என்பது கிராமத்தின் நுழை வாயில் போல இருந்துள்ளது. முக்கிய நபர்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்புகள், பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த தலைவாசலில் நடந்துள்ளன. அன்றைய காலகட்டத்தில் வரி வசூல் என்பது தானியமாக கொடுக்கப்பட்டது, அதை வசூலிக்கும் இடமாகவும் இருந்துள்ளது.
குடவோலை தேர்தல்
அன்றைய காலகட்டத்தில் கிராம நிர்வாகத்திற்கான தலைவரை தேர்வு செய்ய "குடவோலை" முறையை பின்பற்றினர். தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுபவர்கள் பெயர்களை பனை ஓலைகளில் எழுதி ஒரு குடத்தில் உள்ளே போட்டுவிடுவார்கள். பின்பு சிறுவர், சிறுமியர் அல்லது முக்கிய நபர் இந்த ஓலையில் ஒன்றை தேர்வு செய்து எடுப்பார். அதில் உள்ள பெயருக்கான நபரை தலைவராக அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இது குட வோலை முறை என அழைக்கப்படுகிறது.
இதில் போட்டியிட சில விதிமுறைகள் இருந்தன. 30 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், திருமணம் நடந்திருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட கிராமத்தில் சொந்த வீடு, விளைநிலம் இருக்க வேண்டும், வரி பாக்கி வைத்து இருக்கக் கூடாது, வேதம் சார்ந்த கல்வி கற்றவராக இருக்க வேண்டும். இந்த தகுதி உடையவர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என்பது குடவோலை தேர்தலுக்கான அன்றைய விதிமுறை ஆகும். இந்த தேர்தலும் கிராம சாவடியில் தான் நடந்துள்ளன. அந்த வகையில் மடத்துக்குளம் தாலுகா கண்ணாடி புத்தூரில் இந்த கிராம சாவடி வரலாற்றின் அடையாளமாக இன்றும் உள்ளது. தற்போது இந்த சாவடியில் அந்த பகுதியை சேர்ந்த முதியோர்கள் வந்து அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்கிறார்கள்.