< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு - குஜராத் இடையே கலாசார உறவுகள் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாநில செய்திகள்

தமிழ்நாடு - குஜராத் இடையே கலாசார உறவுகள் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 March 2023 5:15 PM GMT

தமிழ்நாடு - குஜராத் இடையே கலாசார உறவுகள் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்தார்.

கலாசார உறவுகள்

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாரத கலாசாரத்தை ஒன்றிணைக்கும் வகையில் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நவீனப்படுத்தும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். குஜராத் மாநில நிதித்துறை மந்திரி கனுபாய் தேசாய், நில் சீர்திருத்த வருவாய்த் துறை ஆணையர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி தேவுசின் சவுகான் கலந்து கொண்டு பேசியதாவது:-

குஜராத் மாநில அரசு சென்னை மற்றும் மதுரையில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. கூடுதலாக திருச்சி, திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்பகோணம், தஞ்சை மற்றும் நெல்லை போன்ற நகரங்களில் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாசார உறவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தொடர் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற திட்டத்துக்கு பிரதமர் மோடி அடித்தளம் போட்டுள்ளார். 2006-ம் ஆண்டு அவர் குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது, அவரது தலைமையில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்றது. உலகெங்கிலும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜி-20 அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முடிவெடுக்கும் இலக்குகளை ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் நிகழ்ச்சி

பின்னர் மத்திய மந்திரி தேவுசின் சவுகான் நிருபர்களிடம் கூறும்போது, சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற திட்டத்தில் ஒரு பகுதியாக குஜராத் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே ஒரு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மக்கள் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கும், தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா மக்கள் குஜராத்தில் உள்ள துவாரகா மற்றும் சோம்நாத் கோவில்களுக்கும் செல்ல ரெயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரம் பேர் இந்த சுற்றுலாவுக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் 15 நாள் தொடர் நிகழ்ச்சி நடைபெறுகிறது, என்றார். இதில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் பொறுப்பாளர்கள் தினகர், கண்ணன், கிரிஜா மனோகரன், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி தலைமை தபால்நிலையத்தில் நடந்த செல்வமகள் சேமிப்பு சிறப்பு மேளாவில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி தேவுசின் சவுகான் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் பலா மரக்கன்றுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்