தூத்துக்குடி
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
|கோவில்பட்டியில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகவிலைப்படியுடன் சட்ட பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப்படி, ஈமக்கிரியை செலவுத் தொகை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் தட்டு ஏந்தி, ஆண்கள் மேலாடை இன்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி வட்டார தலைவர் தங்கவேல், கயத்தாறு வட்டார தலைவர் கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் மாரியப்பன், துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கனகவேல், மாவட்ட இணைச் செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வட்டார செயலாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.