சினிமாவில் உள்ள சுயமரியாதைக்காரர் சத்யராஜ் - கனிமொழி எம்.பி. புகழாரம்
|சுயமரியாதைக்காரராக வாழ்வது கடினம் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் உள்ள வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான உலகின் முதல் ஓ.டி.டி. தளமான 'பெரியார் விஷன்' என்ற ஓ.டி.டி. தளத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தி.மு.க.துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசியதாவது:-
"பெண்கள் தங்களது லட்சியங்களை அடைவதற்கு எது தடையாக இருந்தாலும் உடைத்துப் போட வேண்டும் என சொன்னவர் பெரியார்.. அவரை விட பெரிய பெண்ணியவாதி யாரும் கிடையாது.
சுயமரியாதைக்காரராக வாழ்வது கடினம். அதிலும் திரைத்துறையில் சுயமரியாதைக்காரராக வாழ்வது மிகமிகக் கடினம். அப்படியான நிலையில் திரைத்துறையில் சுயமரியாதைக்காரராக நடிகர் சத்யராஜ் திரைத்துறையில் வாழ்ந்து வருகின்றார் என்றார்.