சத்தியமங்கலம்: காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
|சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளன.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள முதியனூர் ஊரைச் சேர்ந்தவர் ராமு. இவர் தனது நிலத்தில் ராகி பயிரை பயிரிட்டிருந்தார். தற்போது அறுவடை காலம் என்பதால் நேற்று இரவு அவர் வயலில் காவலுக்கு இருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென காட்டுக்குள் இருந்து வந்த யானையொன்று பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனை கண்ட ராமு யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றுள்ளார். அப்போது யானை அவரை துரத்த தொடங்கியது. இதில் அலறி அடித்து ஓடிய அவரை யானை தனது தும்பிக்கையால் தூக்கி போட்டு மிதித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த தாளவாடி வனத்துறையினர் மற்றும் ஆசனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் காட்டுயானை வனப்பகுதிக்குள் வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.