மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை
|மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.
தமிழகம் முழுவதும் 39 வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்களும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.