< Back
மாநில செய்திகள்
சத்தி, பவானி அரசு விதை பண்ணைகளில்  மருத்துவ குணமுடைய  பாரம்பரிய நெல் 10 ஏக்கரில் சாகுபடி
ஈரோடு
மாநில செய்திகள்

சத்தி, பவானி அரசு விதை பண்ணைகளில் மருத்துவ குணமுடைய பாரம்பரிய நெல் 10 ஏக்கரில் சாகுபடி

தினத்தந்தி
|
24 Nov 2022 2:56 AM IST

சத்தி, பவானி அரசு விதை பண்ணைகளில் மருத்துவ குணமுடைய பாரம்பரிய நெல் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நமது முன்னோர்கள் பாரம்பரிய தானிய வகைகளை சாகுபடி செய்து வந்தனர்.

மகசூல் அதிகரிப்பு

இந்த தானிய வகைகளை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்ததால், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக காணப்பட்டது. இதனால் நோய் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் வேளாண்மையில் மகசூல் அதிகரிப்பு, பயிர்களை நோய் தாக்காமலம் இருப்பது போன்ற புரட்சியின் காரணமாக ரசாயன உர பயன்பாடு விவசாயிகள் மத்தியில் அதிகரித்தது. இதேபோல் அதிக விளைச்சலுக்காக மரபணு மாற்றப்பட்ட விதைகளும் பயன்படுத்தப்பட்டது. இது எதிர்பார்த்த அளவு மகசூலை அளித்தாலும், சத்தான உணவாக மக்களை சென்றடைகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே இயற்கையாக விளைவித்த காய்கறிகள், தானிய வகைகளை நோக்கி நுகர்வோர்களின் பார்வை திரும்பி உள்ளது. அதேசமயம் நமது பாரம்பரிய தானிய விதைகள் தொடர்பான ஆராய்ச்சியில் வேளாண்மை விஞ்ஞானிகளும், பேராசிரியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாரம்பரிய நெல்

பாரம்பரிய நெல் சாகுபடிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுவரை இல்லாத நிகழ்வாக வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் அரசு விதை பண்ணைகளிலேயே பாரம்பரிய நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து அறுவடை செய்யப்படும் நெல் விதைச்சான்று முறைகளின்படி கொள்முதல் செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து அதன் சாகுபடி பரப்பளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு சத்தியமங்கலம் மற்றும் பவானி அரசு விதை பண்ணைகளில் அறுபதாம் குறுவை மற்றும் தூயமல்லி ரகங்கள் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 9 ஆயிரத்து 254 கிலோ நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 100 கிலோ செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் நடப்பு ஆண்டிலும், அரசு பண்ணைகளில் தூயமல்லி மற்றும் அறுபதாம் குறுவை ரகங்கள் 10 ஏக்கர் நடவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தியாகும் விதைகள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஈரோடு அருகே பீளமேடு உள்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து உள்ளனர். பீளமேட்டில் உள்ள வயலில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தலைமையில் ஈரோடு உழவர் பயிற்சி நிலைய துைண இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி, வேளாண்மை உதவி இயக்குனர் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கால்நடை தீவனம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது:-

ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய நெல் ரகங்கள் வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடியன. பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகவும், நேரடி விதைப்புக்கு ஏற்றவையாகவும் விளங்குகின்றன. பல ரகங்கள் நீர்ப்பிடிப்பு பகுதியில் விளையக்கூடியதாகவும், பதர்கள் இல்லாமலும், அதிக வைக்கோல்களுடன் சத்தான கால்நடை தீவனத்திற்கு ஏற்ற வகையிலும் உள்ளன.

எளிதில் ஜீரணமாவது, மலச்சிக்கலை நீக்குவது, நரம்புகளை பலப்படுத்துவது போன்ற பல்வேறு வகையான மருத்துவ குணங்களை பாரம்பரிய நெல் ரகங்கள் கொண்டு உள்ளன. அதிக சுவையுடனும், நார்ச்சத்து, புரதச்சத்துடனும் உள்ளன. விவசாயிகளே இந்த ரக விதைகளை இருப்பு வைத்து பாதுகாத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

வயது

34 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. இதில் பூங்கார், கருத்தகார், அறுபதாம் குறுவை போன்றவை 90 நாட்கள் முதல் 110 நாட்கள் வயதுடையவை. மற்ற ரங்கள் அனைத்தும் 120 முதல் 185 நாட்கள் வரை வயதானவையாகும். இதுவரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் பாரம்பரிய நெல் வகைகளில் 77 சதவீதம் முதல் 81 சதவீதம் வரை கார்போஹைட்ரேட்,

5.81 சதவீதம் முதல் 7.43 சதவீதம் வரை புரதம், 0.2 சதவீதம் முதல் 0.74 சதவீதம் வரை நார்ச்சத்து உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மாப்பிள்ளை சம்பா, கருத்தகார், தூயமல்லி, தங்கச்சம்பா, கிச்சடிச்சம்பா, அறுபதாம் குறுவை, சீரக சம்பா, காட்டுயானம், கருப்புக்கவுனி, சிவப்புக்கவனி உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்

கருங்குறுவை ரண குஷ்டத்தையும், சிலவகை விஷத்தையும் நீக்க வல்லது. கருத்தகார் வெண்குஷ்டத்தை போக்கவும் புற்றுநோய்க்கு மருந்து செய்யவும் பயன்படுகிறது. தூயமல்லி பிரயாணிக்கு மிகவும் ஏற்றதாகும். குடவாழை சர்க்கரை நோய் வரவிடாமல் தடுக்கவும், செரிமான பிரச்சினையை குணப்படுத்தவும் உதவுகிறது.

பூங்கார் ரகம் புயல் வெள்ளம், வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. மேலும், சுகப்பிரசவத்திற்கு வழி வகுக்கும். மாப்பிள்ளை சம்பா நரம்புகளை வலுப்படுத்தவும், ஆண்மை தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. சிவப்புக்கவுனி இதயத்தை பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, மூட்டு வலியை நிவர்த்தி செய்யும். கருப்புக்கவனி புற்றுநோய் எதிர்ப்பு, இன்சுலின் சுரப்பை தூண்டல் ஆகிய தன்மைகளை கொண்டது. இதில் 18 அமினோ அமிலங்கள் உள்ளன. குழியடிச்சான் ரகம் உப்பு மண்ணிலும், மிக அதிக வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியது. குள்ளக்கார் ரக அரசி உடற்பருமனை குறைக்க வல்லது. இதில் துத்தநாகம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக பாரம்பரிய நெல்லில் உருவாக்கும் அரிசி, உடல் கொழுப்பு அளவு உருவாவதை தடுக்கிறது. அதிக உரம், பூச்சிக்கொல்லி மருந்து இதற்கு தேவையில்லை. ஆரோக்கியமான உணவாக பாரம்பரிய அரிசி பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறினார்.

ஆராய்ச்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கோவை, ஆடுதுறை, பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இணை பேராசிரியர் கை.அமுதா கூறுகையில், "மாப்பிள்ளை சம்பா என்ற ரகத்தில் இனத்தூய்மையை பாதுகாத்து, வேதியியல் கூட்டமைப்புகளை மேம்படுத்தவும், கவுனி ரகங்களில் பண்புகளை மேம்படுத்தவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது", என்றார்.

பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்து விவசாயிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண்மைக் கண்காட்சி, கருத்தரங்கம், பாரம்பரிய உணவு திருவிழா ஆகியன நடத்தபட்டு வருவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்