தேனி
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
|தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 443 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரிக்கைகள்
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்காக தேனி பள்ளிவாசல் தெருவில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காலை திரண்டனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
மேலும், இதில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் நேரு சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பழைய பஸ் நிலையம் அருகில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
443 பேர் கைது
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 417 பெண்கள் உள்பட மொத்தம் 443 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.