சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; கைது செய்யப்பட்ட காவலருக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி
|மூச்சுத்திணறல் காரணமாக காவலர் வெயிலுமுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் கடுமையாக தாக்கியதில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட கோர்ட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அடுத்தபடியாக 400 பக்க குற்றப்பத்திரிகை கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 104 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள காவலர் வெயிலுமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
சிறையில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.