சாத்தான்குளம் கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனு 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
|சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனு 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் தாக்கியுள்ளனர். படுகாயங்களுடன் அவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்களை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இதில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக அந்த சமயத்தில் இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் என 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து சி.பி.ஐ. போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, இந்த விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.