சாத்தான்குளம் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 4 மாதம் அவகாசம் கோரிய மனு 27-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
|விசாரணைக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிடக் கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜெயராஜின் மனைவி செல்வராணி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிடக் கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 27-ந்தேதிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை ஒத்திவைத்துள்ளது.