சாத்தான்குளம் கொலை வழக்கு; கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
|சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த தந்தையும், மகனும் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஏற்கனவே மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு கடந்த 1-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் ஆகியோர் ஆஜராகி, இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். சாத்தான்குளம் வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், தற்போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரகு கணேஷின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.