மதுரை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம்:மதுரை கோர்ட்டில் நீதிபதி ஆஜராகி 2-வது நாளாக பரபரப்பு சாட்சியம்
|சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு போலீசார்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுத்தியதாக நீதிபதி பாரதிதாசன் 2-வது நாளாக மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு போலீசார்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுத்தியதாக நீதிபதி பாரதிதாசன் 2-வது நாளாக மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
போலீசார் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் அவர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சி.பி.ஐ. இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்தது. இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
2-வது நாளாக நீதிபதி ஆஜர்
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெண் போலீஸ் ரேவதி, பியூலா உள்பட பல்வேறு முக்கிய சாட்சிகள் ஆஜராகி, தங்களது சாட்சியங்களை பதிவு செய்து உள்ளனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கை நீதித்துறை சார்பில் விசாரித்த அப்போதைய கோவில்பட்டி கோர்ட்டு நீதிபதி பாரதிதாசன், நேற்றுமுன்தினம் மதுரை கோர்ட்டில் நீதிபதி தமிழரசி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் நீதிபதி பாரதிதாசன் மதுரை கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவர், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்தது குறித்து தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி தமிழரசி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமும் 3-வது நாளாக நீதிபதி பாரதிதாசன் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுதிப்படுத்தினர்
நேற்றைய விசாரணையின்போதும், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த சம்பவம் குறித்து பெண் போலீஸ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது போலீஸ்நிலையத்தில் தந்தை-மகன் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டனர் என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தினார்கள் என்றும் நீதிபதி பாரதிதாசன் தனது சாட்சியத்தின்போது உறுதிப்படுத்தினார் என்று மதுரை கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.