< Back
மாநில செய்திகள்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: விசாரணையை முடிக்க கீழ்கோர்ட்டுக்கு மேலும் 4 மாத அவகாசம்
மாநில செய்திகள்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: விசாரணையை முடிக்க கீழ்கோர்ட்டுக்கு மேலும் 4 மாத அவகாசம்

தினத்தந்தி
|
29 Aug 2022 8:44 PM GMT

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையை முடிக்க கீழ்கோர்ட்டுக்கு மேலும் 4 மாத அவகாசத்தை மதுரை ஐகோர்ட்டு வழங்கியது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ. கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்து, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என கீழ்கோர்ட்டு தரப்பில் கோரப்பட்டத்தை அடுத்து, மீண்டும் 5 மாத கூடுதல் அவகாசம் ஐகோர்ட்டு வழங்கியது.

மேலும் 4 மாதம்

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட கோர்ட்டு சார்பில், சாத்தான்குளம் வழக்கில் சேர்க்கப்பட்ட 105 சாட்சிகளில் 55 முதல் 60 சாட்சிகளே முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாரத்திற்கு 2 நாட்கள் வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 போலீசாருக்கான வக்கீல்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மேலும் 4 மாத கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேலும் 4 மாத அவகாசம் அளித்து அதற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்