< Back
மாநில செய்திகள்
சசிகலாவால் எனது குடும்பத்துக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியீடு
மாநில செய்திகள்

சசிகலாவால் எனது குடும்பத்துக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியீடு

தினத்தந்தி
|
18 Dec 2022 12:05 AM IST

தாயை பற்றி பேசியதற்கு சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரால் எனது குடும்பத்துக்கு நிச்சயம் ஆபத்து என்றும் ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

பரபரப்பான ஆடியோ

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இதுதொடர்பான அறிக்கையும் சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையின்போது, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தவாறு எழுத்துமூலமாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கும், அவருடைய அண்ணன் மகளான ஜெ.தீபாவுக்கும் இடையே இணக்கமான சூழல் இருந்தது இல்லை. ஜெயலலிதாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் தாய் விஜயலட்சுமி புகார் கொடுத்ததாக சசிகலா கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு ஜெ.தீபா பரபரப்பான ஆடியோ வெளியிட்டு, கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

அருகதை இல்லை

இதுதொடர்பாக ஜெ.தீபா வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சசிகலா உண்மை விரும்பியாக இருந்திருந்தால் என் அத்தையின் (ஜெயலலிதா) மரணத்தில் சந்தேகம் எழுந்திருக்காது. என் தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற மூன்றாம் நபருக்கு, எங்கள் குடும்பத்தோடு தொடர்பு இல்லாத அவருக்கு பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாக சசிகலாவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு என்னுடைய தாய் தந்தி கொடுத்தது உண்மைதான். ஆனால் அது என் அத்தை மீது இல்லை. என் அத்தைக்கு, சசிகலா மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் ஆபத்து இருப்பதாக கொடுத்தார். அத்தை உடனான உறவு முறிந்தது, என் அம்மாவின் செயலால் கிடையாது. இதுதான் என்னுடைய விளக்கம்.

வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும், எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதை மாற்றி, அவர் (சசிகலா) மீது இருக்கும் தவறை மறைத்து, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். சசிகலாவை போன்று பொய்யர் நாங்கள் கிடையாது. நாங்கள் நடுத்தர குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சசிகலா குற்றச்சாட்டின்படி என்னுடைய தாயார் அவருடைய வாழ்க்கையில், கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி உள்பட யாரையும் சந்தித்து பேசியதே கிடையாது. என்னுடைய தாயார் பற்றி இன்னொருமுறை சசிகலா பேசினால் நன்றாக இருக்காது. அந்த மரியாதையை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

எந்த தவறும் செய்யவில்லை என்றால் கோர்ட்டிலும், போலீசிலும், மக்களிடமும் சசிகலா நிரூபிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு என் அத்தைக்கு, என்னை பிடிக்காது, என் அம்மாவை பற்றி அத்தை தவறாக சொன்னார்கள் என்று தப்பு, தப்பாக என் குடும்பத்தை பற்றி விமர்சிப்பது சரியில்லை. இதற்காக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பேன். அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் (தீபக்) மட்டும் பிடிக்கும் என்பதும் பொய். 1997-ல் மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது நானும், எனது சகோதரனும்தான் சென்று பார்த்தோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே சசிகலா கூறும் குற்றச்சாட்டுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது.

என் அத்தைக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு சசிகலாவும், அவருடைய உறவினர்களுமே காரணம். சசிகலா தன்னுடைய ஆதாயத்துக்காக அத்தையின் நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டார். இந்த உண்மை ஒரு நாள் வெளியே வரும். என்னுடைய குடும்பத்தை பற்றி, என் அம்மாவை பற்றி தேவை இல்லாமல் பேசிக்கொண்டிருந்தால் பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டேன். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். அத்தை சிகிச்சை பெற்றதாக வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ அப்பல்லோ ஆஸ்பத்திரியே கிடையாது. அது ஒரு அப்பட்டமான பொய். அந்த வீடியோ வெளியிட்ட நபர் சசிகலா தரப்பை சேர்ந்தவர். நல்லவர்கள் என்றால் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் அரசியலில் இருந்து விலகவேண்டியதுதானே. அத்தைக்கு பாதுகாப்பாக இருந்ததாக கூறும் சசிகலா அரசியல் வேண்டும், அரசியல் வேண்டும் என்று ரோடு, ரோடாக அலைய காரணம் என்ன?.

மரியாதை கொடுக்கமாட்டேன்

எல்லாவற்றையும் தியாகம் செய்தால் மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு (சசிகலா) இனிமேல் மரியாதை கொடுத்து பேசமாட்டேன். பணத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் என்னவெல்லாம் செய்தீர்கள்.

நாங்கள் என்ன தவறு செய்தோம். என் அம்மாவின் சாவுக்கு கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர்தான் சசிகலா. என் தம்பி எப்படி உண்மையை சொல்வான். அவனைதான் சசிகலா, தன் கைக்குள் வைத்திருக்கிறாரே. முதலில் அவனை சசிகலா விடவேண்டும்.

அரசியலில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் என சசிகலா குடும்பம் விலகவேண்டும். சசிகலா என்னிடம் வந்து நேரடியாக பேசவேண்டும். எனது தந்தை-தாய், எனக்கு, அத்தைக்கு என எங்கள் குடும்பத்தில் நல்ல உறவு எப்படி இருந்தது என்பதை நான் சொல்கிறேன்.

ஆபத்து

அத்தை வீட்டின் எதிரே வீடு கட்டுவதற்கு எப்படி வந்தது பணம்?. அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் இதனை கேட்க வேண்டும். தமிழக அரசு இந்த கொலைகார கூட்டத்தின் மீது யாருக்கும் கட்டுப்படாமல் எல்லா நடவடிக்கையையும் தள்ளிப்போடாமல் எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் சசிகலா, அவரை சேர்ந்தவர்களால் எனக்கும், என் குடும்பத்துக்கும் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.

என் குடும்பத்துக்கு பல்வேறு தியாகங்களை செய்து, கட்டி காத்தவர் என் தாய். என்னுடைய தாயை பற்றி பேசுவதை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன். என் அம்மா என் தெய்வம், என் உயிர். இதற்கு சசிகலா பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்