< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு? - ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சசிகலா பரபரப்பு பேட்டி
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு? - ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சசிகலா பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
3 Feb 2024 12:59 PM IST

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா சந்தித்தார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். அப்போது, அண்ணாவுக்கு மரியாதை செலுத்த நினைவிடத்திற்கு சசிகலாவும் வந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் நேருக்கு நேர் சந்தித்தனர்.

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாங்கள் எப்போதும் மக்களை நம்பி இருப்பவர்கள். நிச்சயமாக மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள். தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணி சரியாக நடந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். நல்லபடியாக நடக்கும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது வரவேற்கத்தக்கது' என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அனைவரும் எங்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்தான் என நான் ஆரம்பத்தில் இருந்தே நினைத்துக்கொண்டிருக்கிறேன்' என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். நமது மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ? அதை மத்திய அரசிடம் கேட்டு பெறக்கூடிய திறமையுள்ள நபர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.


மேலும் செய்திகள்