< Back
மாநில செய்திகள்
சேலை, சுடிதாரை கயிறுபோல் கட்டி இறங்கியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
சென்னை
மாநில செய்திகள்

சேலை, சுடிதாரை கயிறுபோல் கட்டி இறங்கியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

தினத்தந்தி
|
11 Jun 2022 2:51 PM IST

சேலை மற்றும் சுடிதாரை கயிறுபோல் கட்டி மொட்டை மாடியில் இருந்து பால்கனி வழியாக வீட்டுக்குள் செல்ல இறங்கிய இளம்பெண், சேலை அறுந்ததால் கீழே விழுந்து பலியானார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகள் மகிழ்மதி (வயது 25). முதுகலை பட்டதாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்தார். இவர், சென்னை ஜாம்பஜார் கண்ணப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் தங்கி பயிற்சி மையத்துக்கு சென்று வந்தார்.

மகிழ்மதியை ஊருக்கு அழைத்து செல்வதற்காக உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவரை தன் அறையில் தங்க வைத்துவிட்டு பயிற்சி மையத்துக்கு சென்ற மகிழ்மதி, நேற்று காலை வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் பதற்றமடைந்த மகிழ்மதி, மொட்டை மாடிக்கு சென்று, சேலை மற்றும் சுடிதாரை கயிறுபோல கட்டி அதன் மூலமாக கீழே இறங்கி பால்கனி வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றார்.

அவ்வாறு இறங்கும்போது அவரது பாரம் தாங்காமல் சேலை கயிறு அறுந்ததால் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மகிழ்மதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்