அரியலூர்
சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தில் உள்ள சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இதனிடையே கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர். அதன்படி கடந்த 9-ந்் தேதி கணபதி ஹோமம் நடைபெற்று பின்னர் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. பின்னர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கடத்தில் இருந்த புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு கிராம மக்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.