விழுப்புரம்
மரக்கன்றுகள் நடும் திட்டம்
|அதனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காணை ஊராட்சி ஒன்றியம் அதனூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு, நா.புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் அவர் கூறுகையில், இயற்கை எழில் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையில் பசுமை போர்வை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், நீர் ஆதாரத்தை பெருக்கிடும் வகையிலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது மாவட்டத்தில் முதல் முறையாக அதனூர் ஊராட்சி முன்னோடி ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 300 மரக்கன்றுகள் நடப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவது மட்டும் நமது கடமை அல்ல, அதனை முழுமையாக பராமரித்து பயன்தரக்கூடிய மரக்கன்றுகளாக உருவாகிடும் வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்கு இடம்பெற வேண்டும். மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு பராமரிப்பதன் மூலம் மட்டுமே உரிய காலத்தில் மழைப்பொழிவு, சுத்தமான காற்று, அதிகரித்து வரும் வெப்பநிலையை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார். இவ்விழாவில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, காணை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், அதனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் விருதம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், சீனிவாசன், உதவி பொறியாளர்கள் ரஹீம், ஜெயப்பிரகாஷ், செந்தில்வடிவு, மண்டல வனப்பாதுகாவலர் (ஓய்வு) லட்சுமிகாந்தன் பாலா, மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) சையத்மீர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தீஷ் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.