திருவள்ளூர்
'என் பூமி, என் மரம்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி - கலெக்டர் பங்கேற்பு
|‘என் பூமி, என் மரம்’ திட்டத்தின் கீழ் கடம்பத்தூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்றார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 'என் பூமி, என் மரம்' என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான அட்டைகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் இடையே சுற்று சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்தில் பசுமை போர்வையை அதிகரிக்க 75 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இந்த முயற்சியின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்ட கிராம மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து 23 ஆயிரத்து 949 மரக்கன்றுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதன் செயல்முறையை பள்ளிகளில் பசுமை படையோடு இணைந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2-ம் கட்டமாக 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேலும் பசுமை பகுதிகளாக நம் சுற்று சூழலை மாற்ற முடியும். தற்போது மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் உடன் இணைந்து வழங்கப்பட்டுள்ள அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க முடியும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுகளுடனான அட்டையில் மரக்கன்றுக்கு ஒரு பெயரை சூட்டி மரக்கன்றுகளை முழுமையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறாக பராமரிக்கப்படும் ஒவ்வொரு மரக்கன்றும். நாளை விருட்சமாகி ஒரு பசுமை பகுதியாக காட்சியளிக்கும் என்பதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு மாணவ மாணவியரும் மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து கலெக்டர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 'என் பூமி, என் மரம்' என்ற திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பூபால முருகன், தேன்மொழி, கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.