< Back
மாநில செய்திகள்
உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
25 Jan 2024 9:20 PM IST

சாந்தனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் அடைப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டு திருச்சி, சிறப்பு முகாமிலிருக்கும் தம்பி சாந்தன் சிறுநீரகம், கல்லீரல் ஆகியவைப் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கிற செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறப்பு முகாம் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும், தம்பிகள் சாந்தன், இராபர்ட் பயஸ், முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோர் மற்றுமொரு கொடுஞ்சிறையில்தான் அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு சிறையில் சிறைவாசிகளுக்கு வழங்கக்கூடிய அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்து, சிறப்பு முகாமில் வைத்து அவர்களை வதைத்து வரும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

30 ஆண்டுகால சிறைவாசத்தினால் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்ட தம்பிகளை விடுவித்து, அவர்களை வெளியே தங்க வைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தோம். குறைந்தபட்ச மனிதநேயம்கூட இன்றி, அவர்களை சிறப்பு முகாமில் அடைத்ததன் விளைவினால், இன்றைக்கு அவர்களது உடல்நிலை இன்னும் மோசமாகியிருக்கிறது. ஏற்கனவே, தம்பி ராபர்ட் பயஸ் முதுகுத்தண்டு வலியாலும், சுவாசப் பிரச்சினைகளாலும், அண்ணன் ஜெயக்குமார் கண்பார்வைக் குறைபாடுகளாலும் அவதிப்பட்டு வரும் நிலையில், தம்பி சாந்தனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிக்கல் ஏற்பட்டிருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. 'ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்' எனத் தேர்தலுக்கு முன்பு முழங்கிய ஐயா ஸ்டாலின், ஈழத்தமிழர்களான தம்பிகள் சாந்தன், இராபர்ட் பயஸ், முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரை சிறப்பு முகாமிலே வைத்து, எஞ்சிய அவர்களது வாழ்வையும் முடித்துவிட எண்ணுகிறாரா? சிறப்பு முகாமிலேயே வைத்து அவர்களைச் சாகடிப்பதுதான் விடியல் ஆட்சியா? 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடிய அவர்களை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தபோது, சிறப்பு முகாம் எனும் பெயரில் இன்னொரு சிறையில் அடைக்க வேண்டாமென எடுத்துரைத்தும், அதற்கெதிராகப் போராட்டம் நடத்தியும் மனமிரங்காத திமுக அரசு, சிறப்பு முகாமில் அடைத்து நால்வரையும் பெருந்துயரத்துக்கு ஆளாக்கி வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஆகவே, தம்பி சாந்தனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், அவரது விருப்பத்தின்படி இலங்கைக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, தம்பி இராபர்ட் பயஸ், தம்பி முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரை அவர்களது விரும்புகிற நாட்டுக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்