திருநெல்வேலி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை சங்கர்நகர் பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
|நெல்லை கலெக்டர் அலுவலகத்தை சங்கர்நகர் பகுதி பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி காலி குடங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை சங்கர்நகர் பகுதி பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி காலி குடங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிபுரம் பொதுமக்கள் இந்திய ஜனநாயக கட்சி துணைப்பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கொடுத்த மனுவில், "எங்கள் ஊர் திருக்குறுங்குடி பேரூராட்சியின் கீழ் உள்ளது. எங்கள் ஊருக்கு குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் பேரூராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. நாங்கள் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்தில் தான் குடி தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே எங்கள் ஊரை பேரூராட்சியில் இருந்து நீக்கி செங்களாகுறிச்சி ஊராட்சியில் சேர்க்கவேண்டும்" என்று கூறியுள்ளனர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை அருகே உள்ள நாராணபுரம் பகுதி-1, சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜிநகர், வையாபுரிநகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செயலாளர் அய்யப்பன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், "நாங்கள் 16 ஆண்டு காலமாக இங்கு குடியிருந்து வருகிறோம். ஆனால் இதுவரை பேரூராட்சி சார்பில் எங்களுக்கு குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
நெல்லை மாநகராட்சி 43-வது வார்டு வீரமாணிக்கபுரம் பகுதி மக்கள் கவுன்சிலர் சுந்தர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
குவாரியை மூட வேண்டும்
கோபாலசமுத்திரம் அருகே உள்ள ஓமநல்லூர் பகுதி மக்கள் கவுன்சிலர் சுதா தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பகுதியில் உள்ள கல்குவாரியை மூட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வன்னிக்கோனேந்தலை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில், "பசுமை வீடு திட்டத்தின் கீழ் நான் கட்டியுள்ள வீட்டிற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மின்சாரம் இல்லாமல் படிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறாள். எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எனது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைப்பேன்" என கூறியுள்ளார்.
இதேபோல் பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.