< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
3 Nov 2022 6:45 PM GMT

பணியிடங்களை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்து கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

பணியிடங்களை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்து கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மாநகராட்சிகளில் ஊழியர் பணியிடங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசின் அரசாணை எண். 152-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் சந்திரன், பிரதீப் குமார், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சிவா, நிர்வாகி பால்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியிடங்களை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது. அரசாணை எண். 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ரத்து செய்ய வேண்டும்

இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

அரசாணை எண். 152-ஐ அமல்படுத்தினால் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையாளர், பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டும் அரசின் வசம் இருக்கும்.

மீதமுள்ள பணியிடங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும். மாநகராட்சிகளில் அமல்படுத்தப்படும் என அரசு கூறியுள்ளது.

நாளடைவில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான முதல் படி இத்திட்டம். இதன் மூலம் நிரந்தர பணியிடங்கள் முழுமையாக தனியார் வசம் செல்லும். இத்திட்டம் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, அரசாணை எண்.152 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்