காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்
|காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9,300 வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது புதிய தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது.
சாலைமறியல்
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நேற்று காலையில் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் உள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தியதை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.