< Back
மாநில செய்திகள்
தெருவில் உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

தெருவில் உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

தினத்தந்தி
|
16 July 2023 1:15 AM IST

தெருவில் உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

முசிறி:

முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக நேற்று நகராட்சி அலுவலகம் அருகில் தெருவில் உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தினை நடத்தினர். இதில் பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில், தற்காலிக தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வாக்கக்கூடாது, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் உணவு சமைத்து சாப்பிட்டனர். இது பற்றி தகவல் அறிந்து முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமையில் தாசில்தார் பாத்திமா சகாயராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோரை முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அரசு பணிகளில் தனியார் மயமாதல் அரசின் கொள்கை முடிவாகும். தூய்மை பணிகளில் தடை ஏதும் ஏற்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்றும், பணியாளருக்கு ஊதியமாக ஒரு தூய்மை பணியாளருக்கு ரூ.450 மற்றும் பி.எப்., இ.எஸ்.ஐ., இன்சூரன்ஸ் தொகை செலுத்த வேண்டும் என்றும், பின்வரும் காலங்களில் அரசிடம் என்று ஊதிய உயர்வு சம்பந்தமாக ஆணைகள் ஏதும் வரப்பெற்றால் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் இன்ஸ்பெக்டர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்