சென்னை
குப்பைகளை அகற்றியபோது மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் சாவு
|குப்பைகளை அகற்றியபோது மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலியான சம்பவம் வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர், சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர், நேற்று காலை வழக்கம்போல் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின் தெருவில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார்..
அங்குள்ள குப்பை தொட்டியின் அருகே தரையில் சரிவர புதைக்கப்படாமல் மின்கம்பி வெளியே தெரியும்படி இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மழை பெய்ததால் மழைநீரின் ஈரத்தால் சரியாக புதைக்கப்படாத மின்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது.இது தெரியாமல் அங்கு குப்பைகளை சேகரித்து கொண்டு இருந்த சேகர், அதன் மீது கால் வைத்து விட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், சேகரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், சேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி வேளிச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் உள்ளகரத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் தனக்கு சொந்தமான மாடுகளை ஆதம்பாக்கம் ஜீவன் நகரில் வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு நேற்று முன்தினம் இரவு ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெரு மேடவாக்கம் பிரதான சந்திப்பு அருகே குப்பை தொட்டியின் கீழே இருந்த உணவு கழிவுகளை மேய்ந்து கொண்டு இருந்தது.
அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசியபோது, மின்சாரம் தாக்கி பசு மாடு அதே இடத்தில் பரிதாபமாக செத்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு சரி செய்யப்பட்டது. பலியான பசு மாட்டின் உடலும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.