திண்டுக்கல்
திண்டுக்கல்லில் 12 இடங்களில் தூய்மை பணி
|திண்டுக்கல்லில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 இடங்களில் தூய்மை பணி நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி இன்றுடன் (திங்கட்கிழமை) 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாநகராட்சியில் 2-வது வார்டு பகுதி உள்பட 12 இடங்களில் நேற்று தூய்மை பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதேநேரம் வார்டு பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் தலைமையில் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட பலர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலைய நடைமேடைகள், டிக்கெட் வழங்கும் இடம், ரெயில் தண்டவாள பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பயணிகள், பொதுமக்களால் வீசப்பட்ட குப்பைகளை சேகரித்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.