நாமக்கல்
புது மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்
|பரமத்திவேலூரில் புது மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு சண்டிகா பரமேஸ்வரி மகாஹோமம் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 19, 20-ந் தேதி சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து 108 கலச பூஜையும், சிறப்பு அபிஷேகமும், பிரசாதம் வழங்குதலும், 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108 திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். நேற்றுமுன்தினம் காலை மகாலட்சுமி அம்சமான வலம்புரி மற்றும் மகாவிஷ்ணு அம்சமான இடம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதனை தொடர்ந்து மாலை சப்தசதி பாராயணம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி பூஜை, ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரி ஹோமம் மற்றும் அம்பிகைக்கு விசேஷ அலங்காரமும் நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனையும், சுமங்கலி பூஜை மற்றும் கன்னிகா பூஜையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் பேட்டை சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் சண்டிகா பரமேஸ்வரி மகாஹோம விழா குழுவினர், கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.