காஞ்சிபுரம்
படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
|படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் படப்பை ஏரி, மணிமங்கலம் ஏரி, ஆதனூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, நாவலூர், காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, பெரிய ஏரி, வளையக்கரணை ஏரி, ஒரகடம் ஏரி, என 37 ஏரிகள் உள்ளது. மழை வெள்ள காலத்தில் அதிகப்படியான நீர்வரத்தால் பாதிக்கும் ஏரிகளின் கரைகள் உடைப்பு ஏற்பட்டால் தற்காலிகமாக சீரமைக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் வழக்கமாக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். அதுபோல் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மணல் மூட்டைகள் சேதம் அடைந்து மணல் குவியலாக மாறி மணலின் மீது செடி, கொடிகள் முளைத்து உள்ளது. சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சிதிலமடைந்த மணல் மூட்டைகளை புதிய சாக்கு பைகள் கொண்டு தயார் நிலையில் வைக்கப்படமால் உள்ளது.
எனவே தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் படப்பை பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடப் பகுதியில் வைக்கப்பட்டு சிதிலமடைந்த மணல் மூட்டைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.