திருவாரூர்
திரவுபதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
|திரவுபதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாட்டில் தருமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் தீமிதி விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் ஆதினத்தார் மண்டகப்படியையொட்டி நடந்த விழாவில் ஹக்கீம் செய்யது தாவுது காமில் வலியுல்லாஹ் தர்காவின் முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அறங்காவலர் தமிமும் அன்சாரி சாகிப் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், கோவில் பரம்பரை அறங்காவலர் பாலசுப்ரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமஜெயம் ஆகியோர் வரவேற்று அவர்களுக்கு மாலை அணிவித்தனர். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் வேதரத்தினம், முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மகாபாரத கதை சொல்லும் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை, சாமி வீதி உலா ஆகியவை நடந்தது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) தீமிதி திருவிழா நடக்கிறது. அப்போது தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.