< Back
மாநில செய்திகள்
கோர்ட்டு உத்தரவை மீறி மணல் குவாரி அமைக்க புதிய விதிகள் வகுப்பதா?
மதுரை
மாநில செய்திகள்

கோர்ட்டு உத்தரவை மீறி மணல் குவாரி அமைக்க புதிய விதிகள் வகுப்பதா?

தினத்தந்தி
|
20 Sept 2022 1:50 AM IST

கோர்ட்டு உத்தரவை மீறி மணல் குவாரி அமைக்க புதிய விதிகள் வகுப்பதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக கேள்வி எழுப்பினர்.


கோர்ட்டு உத்தரவை மீறி மணல் குவாரி அமைக்க புதிய விதிகள் வகுப்பதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக கேள்வி எழுப்பினர்.

மணல் குவாரியால் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் இயற்கையாகவே வறட்சியான பகுதி. இந்தநிலையில் கே.வேப்பங்குளம் கிராமத்தில் 4.95 எக்டேர் பரப்பளவில் மலட்டாறு பகுதியில் புதிய மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த மணல் குவாரிக்கான அனுமதியை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கடந்த மே மாதம் வழங்கியுள்ளார். இந்த குவாரிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக கள ஆய்வு செய்யவில்லை. பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை.

மணல் குவாரி அமைந்துள்ள கே.வேப்பங்குளம் அருகில் 5-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் மற்றும் கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர்தான் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மணல் குவாரி அமைத்ததால் தண்ணீர் வினியோகம் தடைபடும் சூழல் உள்ளது.

எனவே அந்த மணல் குவாரி செயல்பட ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

புதிய விதிகள் வகுப்பதா?

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மணல் குவாரி அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது யார்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது, மணல் குவாரி அமைப்பது தொடர்பாக கோர்ட்டுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆனால் அதனை மீறி அதிகாரிகள் புதுவிதிகளை உருவாக்குவதா? என அதிரடியாக கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து அரசு தரப்பில், பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது..

அதன் பேரில் இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்