< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி உடனே திறக்க வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி உடனே திறக்க வேண்டும்

தினத்தந்தி
|
20 Jun 2023 1:06 AM IST

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி உடனே திறக்க வேண்டும்

திருவிடைமருதூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரியை திறக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சாலை தவவளவன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்னடர்.

கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் துணைத்தலைவர்கள் அன்பு, பேர்நீதிஆழ்வார், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் மூர்த்தி, புகையிலை தொழிலாளர் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் கட்டுமான தொழிலாளர்கள், புகையிலை தொழிலாளர்கள், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொடுத்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியம்

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 60 வயது முடிந்தவுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலதாமதம் ஆகாமல் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களை முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் இணைப்பதுடன் இ.எஸ்.ஐ. திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

விபத்து இறப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மணல்குவாரி திறக்க வேண்டும்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி திறக்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். மாட்டுவண்டி தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. தற்போது அவர்கள் வருமானத்தை இழந்து வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள். எனவே இதில் உடன் தலையிட்டு மணல்குவாரியை திறப்பதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்.

தடையை ரத்து செய்ய வேண்டும்

கும்பகோணத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மெல்லும் புகையிலை தயார் செய்து விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவின் பேரில் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டு நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதனால் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியில்லாமல் குடும்பத்துடன் தவித்து வருகிறோம். எனவே மெல்லும் புகையிலை மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் புகையிலை தொழிலாளர்களான எங்களுக்கு அரசு மாற்று வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. ஆனால் இந்த கூட்டங்களை அதிகாரிகள் புறக்கணிப்பதால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. எனவே அனைத்து துறை அதிகாரிகளையும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்