மதுரை
மணல் அள்ள லஞ்சம்: தாசில்தாருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்ய தேவையில்லை- உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
|மணல் அள்ள லஞ்சம் பெற்ற வழக்கில் தாசில்தாருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்ய தேவையில்லை என்றும், அவரை உடனடியாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மணல் அள்ள லஞ்சம் பெற்ற வழக்கில் தாசில்தாருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்ய தேவையில்லை என்றும், அவரை உடனடியாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
லஞ்சம் வாங்கிய தாசில்தார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாசில்தாராக பணியாற்றியவர் துரைராஜ்.
இவர், அங்கு உள்ள நெருஞ்சிக்குடி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சிலரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சின்னையா என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே கடந்த 12.7.2013 அன்று லஞ்சப்பணத்தை துரைராஜ் வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கை புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு விசாரித்தது. முடிவில் துரைராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து 2017-ம் ஆண்டில் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து துரைராஜ், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
சிறையில் அடைக்க உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் உள்ளது. இவரைப் போன்றவர்களால் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டின் மீதான நம்பிக்கை சிதைக்கப்படுகிறது. லஞ்சம் மற்றும் ஊழல் என்பது புற்றுநோயை போன்றது. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து அகற்றாவிட்டால், உயிரிழப்பு போன்ற கடும் இழப்புகளை ஏற்படுத்தும்.
மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனை அதிகம் கிடையாது. எனவே இந்த தீர்ப்பில் தலையிட தேவையில்லை. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கான தண்டனை காலத்தை அனுபவிக்கும் வகையில், உடனடியாக அவரை பிடித்து சிறையில் அடைக்க கீழ்கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.