சனாதன விவகாரம்: கோவையில் தி.மு.க-பா.ஜ.க. போஸ்டர் யுத்தம்
|சனாதன விவகாரத்தில் கோவையில் தி.மு.க.-பா.ஜ.க.வினர் போஸ்டர்களை மாறி, மாறி ஒட்டி வருகிறார்கள்.
கோவை,
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொலைவெறியை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்துள்ள சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
போஸ்டர் யுத்தம்
இந்தநிலையில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரில் ''போலிச்சாமியாரே! 100 கோடி தர்றோம்... தொடுடா பார்க்கலாம்'' என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன. பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரில் ''சனாதனம் எங்கள் உயிர் மூச்சு'' என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டி, போட்டு ஒட்டப்பட்டு உள்ள இந்த போஸ்டர்களை பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இந்த போஸ்டர் யுத்தம் காரணமாக கோவை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.