கன்னியாகுமரி
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம்ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
|சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம் தான். தேவையற்ற விவகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
திருவட்டார்,
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம் தான். தேவையற்ற விவகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
அடிக்கல் நாட்டு விழா
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது ஆஞ்சநேயசாமி கோவில். இங்கு 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைத்தல் மற்றும் சிலை அமைக்கும் பணி தொடங்கியது.
இதற்கிடையே அங்கு மகாவிஷ்ணு கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேரை இழக்க மாட்டார்கள்
ஆன்மிகம் எங்கும் பரவ வேண்டும். சனாதனம் தர்மம் என்பது தனிப்பட்ட தர்மம் அல்ல, அது இந்து மதத்தின் ஒரு அங்கம் தான். சானாதனத்தை ஒழிப்பேன் என்பது நமது வேரின் மீது நாமே கந்தக அமிலத்தை ஊற்றுவது போன்று தான்.
யாரும் தன்னுடைய வேரை இழக்க விரும்ப மாட்டார்கள். இந்து மதத்தில் மட்டுமே மகத்தான உண்மை இருக்கிறது. தவறு என்று தெரிந்தால் அதை திருத்தி கொள்வதும், அதை ஏற்று கொள்வதும் இந்து மதத்திலே உள்ள தெளிவு.
தீண்டாமை பாவம் இல்லை எனில் பாவம் என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை. தீண்டாமையை காட்டிலும் கொடுமையானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை என முதன், முதலாக உலகிற்கு பறை சாற்றியதே ஆர்.எஸ்.எஸ். தான். பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை இந்து மதம் ஒருபோதும் ஏற்று கொள்வது இல்லை.
தேவையற்ற விவகாரம்
இந்து மதத்தின் மகத்தான இதிகாசமான மகாபாரதமும், ராமாயணமும் சாதாரண குடியில் பிறந்தவர்களால் தான் இயற்றப்பட்டு இருக்கிறது.
தேவையற்ற விவகாரத்தில் கவனம் செலுத்துவதை தமிழக அரசு தவிர்த்து விட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏதோ அரசே போனாலும் நாங்கள் அதை பற்றி கவலைப்பட மாட்டோம் என்பது வாக்களித்த மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை தான் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசியுரை
முன்னதாக ஆஞ்சநேய சித்தர் தலைமையில் பூஜை நடந்தது. விழாவில் கலந்து ெகாண்டவர்களை ஆர். பத்மதாஸ் வரவேற்று பேசினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாதார பிரிவு நிர்வாகி அய்யப்பன், குலசேகரம் எஸ்.ஆர்.கே. கல்வி நிறுவன தாளாளர் என். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். கேரள மாநில சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் பியூஸ் எம். நம்பூதிரிபாடு வாழ்த்தி பேசினார்.
விழாவில் திருவட்டார் ஆஞ்சநேய தீர்த்தம் என்ற பாடல் சி.டி.யை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். முடிவில் வி.ஜெயந்தி வெள்ளத்துரை நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயசாமி கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.