'தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்தது' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
|சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அண்ணாநகரில் தனியார் அமைப்பு சார்பில் 'சனாதன உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்ததாக தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. நாம் அனைவரும் சமம் என்று நமது வேதம் கூறுகிறது. தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன.
தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர், திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளிட்ட பல இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளில் சனாதனம் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், உங்களால் முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் சென்று அழித்துப் பாருங்கள். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை."
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.