காஞ்சிபுரம்
சுங்குவார் சத்திரம் அருகே விநாயகர் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு - பக்தர்கள் சாலை மறியல்
|சுங்குவார் சத்திரம் அருகே விநாயகர் கோவிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் சேதபடுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் புகுந்து விநாயகர் சிலை, நவகிரக சிலைகளை உடைத்து கோவில் அருகே தூங்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலைகளை சேதபடுத்தி உள்ளனர். கோவில் சிலைகள் சேதப்படுத்தபட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் வேகமாக பரவியது.
இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம நபர்களை கைது செய்ய கோரி எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதுபற்றி சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.