குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் சாமி சிலைகள்..!
|மண்ணை தோண்டும்போது மண்வெட்டி பட்டு உலோக சத்தம் கேட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பில்லூர் பகுதியை சேர்ந்தவர் 62 வயதான செல்வராஜ். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்னீர் வீணானதை தொடர்ந்து, உடைப்பை சரிசெய்ய குடிநீர் குழாய் அருகில் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டினார். மண்ணை தோண்டும்போது மண்வெட்டி பட்டு உலோக சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த இடத்தை நன்றாக தோண்டி பார்த்தபோது சிறிய அளவிலான உலோக பெட்டி கிடைத்துள்ளது.
அதனை திறந்து பார்த்தபோது, பெருமாள் சிலை ஒன்றும், இரண்டு ஆண்டாள் சிலைகளும், ஒரு கருடன் சிலையும் இருந்துள்ளது. மேலும், உலோகத்தால் ஆன 5 ருத்ராட்சங்கள், மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை மற்றும் வட்ட வடிவிலான இரண்டு தாலங்களும் இருந்துள்ளது.
ஆச்சர்யத்துடன் அதை எடுத்துப்பார்த்த செல்வராஜ், இதுகுறித்து பேரளம் காவல்நிலையத்திற்கு தகவல்கொடுத்தார். பின்னர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்த நிலையில், அந்த சிலைகள் அனைத்தும் நன்னிலம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது
பழமையான இந்த சிலைகளை தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்தபின் தான் எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்றும் அதன் மதிப்பு பற்றியும் தெரியவரும்.