கரூர்
தோகைமலை அருகே 27 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன சாமி சிலை மீண்டும் கிடைத்தது
|தோகைமலை அருகே மாலைமேட்டில் 27 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன சாமி சிலை மீண்டும் கிடைத்தது.
மாலையம்மன் கோவில்
தோகைமலை அருகே கள்ளை ஊராட்சிக்குட்பட்ட மாலைமேட்டில் மாலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு நாவாப் ஆட்சி காலத்தில் அத்திமரத்தில் செய்த சாமி சிலையை வைத்து தொப்பாநாயக்கன்பட்டி, குப்பமேட்டுப்பட்டி, தொட்டியபட்டி ஆகிய நாயக்கர் மந்தைக்குட்பட்ட கம்பளத்துநாயக்கர் இனமக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 4-ந் தேதி திருவிழா நடைபெறும். இந்த விழாவில் எருது மாலை தாண்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்.
சிலை திருட்டு
இந்தநிலையில் கடந்த 1995-ம் ஆண்டு 3 மந்தையை சேர்ந்த நாயக்கர் ஒன்று சேர்ந்து திருவிழா நடைபெற்ற பின்னர் அதே ஆண்டு இந்த சிலை மர்ம ஆசாமிகளால் திருட்டு போனது. இதனால் கடந்த 27 ஆண்டுகளாக இந்த கோவிலில் சாமி சிலை இல்லாததால் திருவிழா நடைபெறவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3 ஊர்களை சேர்ந்த மந்தை நாயக்கர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு கோவில் திருவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சிலையில்லாமல் திருவிழா எப்படி நடத்துவது என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் கள்ளை மற்றும் கூடலூர் ஊராட்சியில் உள்ள மாலையம்மன் கோவில் பக்தர்கள் சார்பில் புதிதாக மாலையம்மன் சிலை செய்து கோவில் திருவிழா நடத்துவது குறித்து பேசினர்.
27 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருட்டுபோன அத்திமரத்திலான மாலையம்மன் சிலையை மர்ம ஆசாமி கோவில் அருகே வீசிவிட்டு சென்று உள்ளார். இதனால் மாலையம்மன் கோவில் பக்தர்கள் இந்த சிலை கோவிலில் வைப்பதற்கு உரிய அனுமதி வழங்கக்கோரி தோகைமலை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.
திருட்டு போன சாமி சிலை 27 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.