சாமி... அண்ணன் ஈபிஎஸ் தான் தலைமை ஏற்கணும் - சிறப்பு பூஜை செய்த தொண்டர்கள்
|எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டுமென்று வேண்டுதல் வைத்து சேலத்தில் தொண்டர்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
சேலம்,
அதிமுக வில் ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்த வேண்டும். இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அதிமுகவில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதனால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது அதிமுகவில் சர்ச்சையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டுமென்று வேண்டுதல் வைத்து சேலத்தில் தொண்டர்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வரவேண்டுமென்று வேண்டுதல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.