கும்பகோணம் நடன புரீஸ்வரர் சிவன் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
|கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட சம்பந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பார்வதி, சம்பந்தர், கிருஷ்ணகலிங்கநர்த்தனம், அய்யனார், அகஸ்தியர் ஆகிய 5 பஞ்சலோக சாமி சிலைகள் கடந்த 12.5.1971-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் சிலை குறித்த குறிப்புகளோ, ஆவணங்களோ இல்லாததால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தண்டந்தோட்டம் கிராமத்தின் பொதுநலச்சங்கத்தின் தலைவரும், இந்த கோவிலின் பராமரிப்பு பொறுப்பாளருமான வாசு(வயது 67) கடந்த 2019-ம் ஆண்டு கொள்ளை போன சிலைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். இதையடுத்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா புலன் விசாரணை மேற்கொண்டார்.
கலாசார பொக்கிஷங்களின் களஞ்சியமாக திகழும் புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு கல்வி நிறுவனத்தில் கொள்ளை போன சாமி சிலைகளின் புகைப்படங்கள் இருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த புகைப்படங்களை ஒப்பிட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய புலன் விசாரணையில் கொள்ளை போன பார்வதி சிலை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்யும் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.
அந்த சிலையை மீட்டு தமிழகம் கொண்டு வரும் நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் கொள்ளை போன சம்பந்தர் உருவச்சிலையும் அதே ஏல நிறுவனத்தில் இருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின்படி இந்த சிலையையும் மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பந்தர் சிலையின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 94 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.