< Back
மாநில செய்திகள்
சம்பா அறுவடை பணிகள் மும்முரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

சம்பா அறுவடை பணிகள் மும்முரம்

தினத்தந்தி
|
26 Jan 2023 12:15 AM IST

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை பணிகள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில், அப்பகுதி விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும் குறுவை மற்றும் சம்பா தாளடி என நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நடப்பு ஆண்டில் முதல் போக சாகுபடியாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். குறுவை அறுவடை பணிகளின் போது மழை பெய்ததால் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி, அதிக ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால், பல விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது 2-ம் போக சாகுபடியாக சம்பா, தாளடி அறுவடை தொடங்கி உள்ளது.

மழை

ஆனால், அறுவடை தொடங்கியதும், மழையும் பெய்ய தொடங்கி உள்ளது. கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்கள் பரவலாக மழை பெய்தது. மேலும், குறைவான அளவில் மட்டுமே வெயில் அடித்தாலும், அவ்வப்போது வானம் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து மழை வரும் சூழலை வெளிப்படுத்துகிறது. இதனால், அறுவடை பணிகளை தொடங்கிய விவசாயிகளுக்கு மழை மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் மழை குறுக்கிடுவதற்கு முன்பு அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் சம்பா தாளடி அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மகசூல் குறைவு

இது குறித்து வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகூரான் கூறியதாவது:-

"ஏழைகளான நாங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் கடன் வாங்கியே விவசாய பணிகளை செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக அறுவடை நேரங்களில் பருவம் தவறிய மழை குறுக்கிட்டதால், நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால், மகசூல் குறைந்து செலவு செய்த தொகை கூட முழுமையாக கிடைக்கவில்லை. குறுவை சாகுபடியில் நனைந்து போன நெல்லை ஈரப்பதம் குறைப்பதற்கு காய வைக்கும் பணியில் ஈடுபட்ட போது கூட அடிக்கடி மழை குறுக்கிட்டதால் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

தற்போது சம்பா தாளடி அறுவடை தொடங்கியதும் மழையும் தொடங்கி உள்ளது. இதனால், பெரிய அளவில் மழை பெய்து சேதத்தை ஏற்படுத்தும் முன்பு அறுவடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்திரம் மூலம் அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவா்கள் கூறினா்.

மேலும் செய்திகள்