< Back
மாநில செய்திகள்
சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின

தினத்தந்தி
|
28 Sept 2023 11:34 PM IST

கறம்பக்குடி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. நாற்று பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

குறுவை சாகுபடி

கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழை காலங்களில் ஏரி, குளங்கள் நிரம்புவதால் அதன் மூலமும், ஆழ்குழாய் பாசனம் வாயிலாகவும் இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

காவிரி பாசன பகுதிகளில் ஏற்கனவே குறுவை சாகுபடி செய்யப்பட்டு நெற்கதிர்கள் வளர்ந்து உள்ளன. சில பகுதிகளில் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடிய நிலையில் உள்ளது.

நாற்று நடவு பணி

இந்நிலையில் கறம்பக்குடி தாலுகாவில் உள்ள திருமணஞ்சேரி, பல்லவராயன்பத்தை, மழையூர், மஞ்சுவிடுதி, பட்டத்திக்காடு, அதிரான்விடுதி, வெட்டன் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். சில பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வயல்களை தயார்படுத்தி உழவு பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் நெல் நாற்றுகளை பறித்து நாற்று முடியாக கட்டி நடவு பணிக்காக கொண்டு செல்லும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களாக கறம்பக்குடி பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தட்டுப்பாடு இன்றி உரங்கள்

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கறம்பக்குடி தாலுகாவில் காவிரி பாசன பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் குறுவை சாகுபடி செய்வது இல்லை. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஏரி, குளங்களில் தண்ணீர் இருந்ததால் சம்பா சாகுபடியை முன்கூட்டியே தொடங்கினோம். ஆனால் தற்போது ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. இருப்பினும் மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளோம். மழை பெய்தால் பாசன குளங்களுக்கு தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் வரத்து வாரிகளை சீரமைக்க வேண்டும். விதை நெல், யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்